வன்னியர்களுக்கு 20 % இட ஒதுக்கீடு: அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: வன்னியர்களுக்கு 20 % இட ஒதுக்கீடு தொடர்பாகபாமகவின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் ராமதாஸ் விடுத்திருந்த அறிக்கையில்,  தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை, இதை  தமிழ்நாட்டை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களும், இப்போது ஆட்சி செய்பவர்களும்  நிறைவேற்றவில்லை. நமது உரிமைகளுக்காக நாம் போராட வேண்டிய காலம் வந்து விட்டது, .வன்னியர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்டாளிகள், பாட்டாளி இளைஞர்கள், பாட்டாளி தாய்மார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இப்போதிருந்தே தயாராக வேண்டும் என்று  எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம்,  ராமதாசின்  20 %  இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற   கோரிக்கையை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் , வன்னியர் சமூகத்துக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும் . தற்போது, என்னால் எந்த கருத்தும் கூற முடியாது என்று  கூறினார்.

பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கைவிவரம்:

“ தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்; 21 இன்னுயிர்களை இழந்திருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களும், இப்போது ஆட்சி செய்பவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மீண்டும் ஒரு போராட்டம் நடத்தித்தான் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றால் அதற்கும் தயாராகவே இருக்கிறோம். கொரோனா பாதிப்புகள் ஓரளவு குறைந்த பின்னர் புத்தாண்டில் வன்னியர்களுக்கான 20% தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டம் தொடங்கப்படும் என்ற அறிவித்த ராமதாஸ், “எங்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் சமுதாய நலனுக்காக மீண்டும் ஒரு போராட்டம் நடத்த மாட்டீர்களா அய்யா? என்று பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நாம் போராட வேண்டிய காலம் வந்து விட்டது. வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டுக்காக இப்போது நாம் நடத்தவிருக்கும் போராட்டம் வரலாறு காணாத வகையில் அமையும்” என்று தெரிவித்துள்ளார்

மேலும், “போராட்டத்தைக் கைவிட்டு வாருங்கள்… வன்னியர்கள் தனி இடஒதுக்கீட்டுக்கான உடன்பாட்டில் கையெழுத்திடுங்கள் என்று அரசு நமக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் கடுமையாக அமையும். வன்னியர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்டாளிகள், பாட்டாளி இளைஞர்கள், பாட்டாளி தாய்மார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இப்போதிருந்தே தயாராக வேண்டும்” என்று  தெரிவித்துள்ளார்.