விபத்து, விடுமுறை இல்லாமல் 20ஆண்டுகள் பணி: அரசு பேருந்து ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு

தஞ்சாவூர்:

மீபத்தில் ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளில் ஒருநாள்கூட விடுமுறை எடுக்காமலும், எந்தவித விபத்து ஏற்படுத்தாமலும் சாதனை நிகழ்த்தி உள்ளார்.

தஞ்சாவூர்  அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராகப் பணிபுரிந்து  ஓய்வு பெற்ற அந்த ஓட்டுநருக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள், உடன் பணியாற்றிய சக ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், வணிகர்கள்,  பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுள்ள அந்த ஓட்டுநர் பெயர் மாணிக்கம். இவர் தஞ்சாவூர் அருகே உள்ள செந்தலை கிராமத்தை சேர்ந்தவர். 1998 ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளாக  டிரைவராக பணியாற்றி வந்த மாணிக்கம், கடந்த 30-ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.

அரசு பேருந்து ஓட்டுனர் மாணிக்கம்

இவரது பணி நிறைவு நாளன்று, அவரது சாதனையை போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் நினைவுகூர்ந்து பாராட்டினர். மாணிக்கம் போல ஒவ்வொரு டிரை வரும் தங்களது பணியில் மாணிக்கமாக  ஜொலித்தால், அரசுக்கும், அரசு போக்கு வரத்துக்கும் எந்தவித தீங்கும் ஏற்படாது, போக்குவரத்துத் துறையை அசைக்க முடியாது’ எனக் கூறி வாழ்த்துத் தெரிவித்தனர்.

தனது 20 ஆண்டு கால டிரைவர் அனுபவம் குறித்து பேசிய மாணிக்கம், ஒருவர் சிறப்பாக பணியாற்ற வேண்டுமென்றால், அதற்கு குடும்ப சூழல் மிகவும் முக்கி யம் என்று தெரிவித்தார். எனது சாதனைக்கு எனது மனைவியே காரணம் என்று மனைவியை புகழ்ந்த மாணிக்கம், தன்னுடன் பணியாற்றிய நண்பர்களையும், அவர்களின் உற்சாகப்படுத்தியதையும் நினைவு கூர்ந்தார்.

மேலும், பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்கள்,  உடலையும் மனதையும் நல்ல ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் விபத்துக்கு வாய்ப்பில்லை என்றும் மற்ற டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இவரைப்போல ஒவ்வொரு அரசு பேருந்து ஓட்டுநர்களும் பணியாற்றினால் நாட்டில் விபத்துக்கள் ஏற்படுவது பெருமளவில் குறைந்துவிடும் என்பதில் வியப்பேது மில்லை.