சென்னை: பிலிப்பைன்சில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்ட இந்திய மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்ப முடியாமல் மலேசிய விமான நிலையத்தில் சிக்கி தவிக்கின்றனர்.

அந்நாட்டின் தலைநகர் மணிலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் படித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு அரசும் பல கட்டுப்பாடுகளையும் விதித்து இருக்கிறது. அதனால் அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பும் 3 நாட்களாக முயற்சித்து வருகின்றனர்.

தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் மலேசியா வழியாக இந்தியா திரும்ப முயன்றனர். ஆனால், இந்தியாவுக்கு வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

உடனடியாக தாயகம் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று தமிழக அரசுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்கள் தவிர, 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் மணிலாவில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.