சேகர் ரெட்டி வீட்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரம்! சி.பி.ஐ. வழக்கை ரத்து செய்தது நீதிமன்றம்

சென்னை: பண மதிப்பிழப்பின்போது, பிரபல மணல் மாஃபியா சேகர் ரெட்டி வீட்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ.  வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்து. இதில், முறைகேடு இல்லை என்பது தெரிய வந்துள்ளதால்,  வழக்கை சிபிஐ நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2016 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று பிரபல தொழிலதிபரான சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.  அப்போது அவருடைய வீடு  மற்றும் அலுவலகங்களில் இருந்து புதிய ரூ.2000 நோட்டுக்கள் பிடிபட்டன.   அவற்றின் மதிப்பு ரூ. 33.89 கோடி என அறிவிக்கப்பட்டது.   இது வங்கி அதிகாரிகள் உதவியுடன் மாற்றப்பட்ட மோசடிப் பணம் என கூறப்பட்டது.

இதை ஒட்டி சேகர் ரெட்டி மீது மூன்று வழக்குகள் பதியப்பட்டன.  சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடுத்த மூன்று வழக்குகளில் இரண்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தால் கடந்த வருடம் ரத்து செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து,   மூன்றாவது வழக்கான,  ரூ.24 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், சட்டவிரோதமாக லாபம் அடைந்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், வருமான வரித்துறை அளித்த அறிக்கையில், “சேகர் ரெட்டி தனது எஸ் ஆர் எஸ் மைனிங் என்னும் நிறுவனத்தின் மூலம் மணல் விற்பனை செய்து வந்துள்ளார்.  சோதனையில் பிடிபட்ட ரூ.33.89 மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்கள் இந்த மணல் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் என்பது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ள்ளது.  எனவே இது தொழில் மூலம் கிடைத்த வருமானம் என வருமான வரித்துறையும் அறிக்கை சமர்ப்பித்தது.

தொடர்ந்து சிபிஐ தரப்பிலும்,  சேகர் ரெட்டி உள்பட 6 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் மீதான வழக்கை ரத்துசெய்யலாம் என கூறப்பட்டது.

இதையடுத்து,  தீர்ப்பு வழங்கிய சிபிஐ நீதிமன்ற நிதிபதி ஜவகர்,  சேகர் ரெட்டி உள்பட 6 பேர் மீதான வழக்கை ரத்து செய்வதாகவும், முடக்கப்பட்ட சேகர் ரெட்டியின் சொத்துக்கள் பண மோசடியில் வாங்கப்பட்டது அல்ல என்றதுடன்,  முடக்கப்பட்ட அவரது சொத்துக்களை விடுவிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டார்.