சென்னை: தமிழ்நாட்டில் கிஸான் உர்ஜா சுரக்ஷா இவம் உத்தான் மஹாபியான் திட்டத்தின் கீழ் 20,000 சூரியசக்தி நிறுவல்களை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் மத்திய அரசு நிறுவலாமென்று எதிர்பார்க்கப்படுவதாக அது சார்ந்த துறையின் மேலான்மை இயக்குநரும் தலைவருமான திரு. விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார்.

அவர், மேலும் அத்திட்டம் பற்றிக் கூறுகையில், மத்திய அரசு விவசாயிகளை இத்திட்டத்தில் பங்கேற்க அழைப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதென்றார். விவசாயிகள் சூரியசக்தி மின்மையங்களை அமைத்துப் பயன்படுத்தி, உபரியாகும் மின்சக்தியை நிலையங்களுக்கு வழங்கலாமென்றும் கூறினார்.

அத்துடன், “விவசாயிகள் சூரியசக்தி உற்பத்திக் களங்களை நிறுவ மத்திய அரசிடமிருந்து மானியம் பெறுவார்கள். ஒவ்வொரு உற்பத்தின் களத்தின் அளவு 10 கிலோவாட்டாக இருக்கும். உற்பத்தி செய்யும்-உபயோகிக்கும் விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு, உள்ளூர் துணை நிலையங்களுடன் இணைக்கப்படுவார்கள்“, என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், தற்போது ஏறத்தாழ 9,000 மெகாவாட் காற்றாலையின் மூலம் பெறும் மின்சாரமும், கிட்டத்தட்ட 3,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரமும் கிடைத்து வருகிறது.

1500 கிலோவாட் மின்சக்தியைப் பெறும் வகையில் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் களங்களுக்கான மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.