மீண்டும் ஒரு பேரழிவு சாலை திட்டமா? – ஒருங்கிணையும் விவசாயிகள்

திருவள்ளூர்: சென்னை – கர்ணூல் இணைப்பு சாலையின் ஒருபகுதியாக போடப்படவுள்ள, சென்னைக்கு அருகிலுள்ள தச்சூர் மற்றும் ஆந்திராவின் சித்தூர் ஆகியவற்றை இணைக்கும் 126.5 கி.மீ. தூரத்திலான சாலைக்காக, 19,581 மரங்கள் வெட்டப்படும் அபாயம் நிலவுகிறது.

இந்த சாலை திட்டம் NH-716B என்று அழைக்கப்படுகிறது. இந்த சாலை, தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தின் புலிகொன்றம் காப்புக் காட்டின் வழியே 700 மீட்டர்கள் போடப்படவுள்ளது. அதனால், கிட்டத்தட்ட 20,000 மரங்கள் பலியாகும் அபாயம் நிலவுகிறது.

மேலும், இத்திட்டத்திற்காக 884.26 ஹெக்டேர் அளவிலான நிலங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இதில் 12% காட்டு நிலமும், 76% விவசாய நிலமும், 6% தரிசு நிலமும், 1% குடியிருப்பு நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும்.

மேலும், இதனால் பல நீர்நிலைகளும் பாதிக்கப்படும். நீரோட்டப் பாதைகள் திசைதிருப்பப்படுவதால், மழை காலங்களில் வெள்ள அபாயம் நேரும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. மேலும், வளமான விவசாய நிலங்களும் பாழாகும்.

எனவே, இந்த சாலை திட்டத்தை எதிர்த்து, “திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம்” என்ற பெயரில் விவசாயிகள் பாதிக்கப்படும் மக்கள் ஒன்றிணைந்துள்ளார்கள்.