சென்னை: தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  அதிகப்பட்சமாக மயிலாப்பூரில் 200 மி.மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில்  அடுத்த  2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவுமுதல் சென்னையில் பெய்து வரும் கனமழை காலரணமாக சென்னை மட்டுமின்றி  அருகே உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் கனமழை தொடரும் என்று  இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் கடந்த 10 மணி நேரத்துக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  பெரும்பாலான சாலைகள் தண்ணீரில் மூழ்கி இருப்பதால், வாகன ஓட்டிகள், சாலைகளில் உள்ள பள்ளம் மேடு தெரியாமல் தடுமாறி விழும் அவலக்காட்சிகளும் அரங்கேறி வருகின்றன.
சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையில் மழைவெள்ளம் ஆறாக பாய்ந்தோடி வருகிறது. அதில் பேருந்துகளும் வாகன ஓட்டிகளும் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.

சென்னையில் அதிகபட்சமாக மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பாலவாக்கத்தில் 14.8 செ.மீ, பாடியில் 12.4 செ.மீ., ஜார்ஜ் டவுனில் 11.2 செ.மீ.மழை பதிவாகி உள்ளது. கொரட்டூரில் 10.1 செமீ அண்ணாநகரில் 10.1 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 10.4 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.
2017 நவம்பருக்குப் பிறகு சென்னையில் குறைந்த நேரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.