டெல்லி: 2011ம் ஆண்டு உலகக்கோப்பை ஒட்டுமொத்த அணியின் பங்களிப்பால் வெல்லப்பட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய துவக்க பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர்.

கவுதம் கம்பீர் தற்போது பாரதீய ஜனதாவின் கிழக்கு டெல்லி தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.

சமூகவலைதளத்தில், 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், அப்போதைய கேப்டன் மகேந்திரசிங் தோனி அடித்த வெற்றி சிக்ஸரை முன்னிறுத்தும் வகையில் ஒரு போஸ்ட் பதிவிடப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில்தான், “ஒட்டுமொத்த அணியின் முயற்சியாலேயே உலகக்கோப்ப‍ை வெல்லப்பட்டது” என்று கூறியுள்ளார் கம்பீர்.

அந்த இறுதிப்போட்டியில், சேவாக், டெண்டுல்கர் போன்றவர்கள் முதல் சில ஓவர்களில் நடையைக் கட்டிவிட, மிக மிக இக்கட்டான நேரத்தில் களத்தில் நின்று, 97 ரன்களை அடித்துக்கொடுத்து, அணியின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றார் கம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்போட்டியின் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.