நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா மறுசீராய்வு மனு தள்ளுபடி! நாளை தூக்கிலிடப்பபடுவார்களா?

டெல்லி:

நிர்பயா பாலியல் கொலை குற்றவாளி பவன் குப்தாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து குற்றவாகிளுக்கு நாளை திட்டமிட்டப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தியது. ஆனால், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை பல்வேறு சட்ட பிரிவுகளை காரணம் காட்டி, இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து,  குற்றவாளிகள் நான்கு பேருக்கும்  ஜனவரி 22ம் தேதி தூக்கில் போடும்படி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், குற்றவாளிகள் சார்பாக அவர்களது வழக்கறிஞர்கள் பல்வேறு காரணங்களைக் கூடி வழக்கு தொடர்ந்து, தூக்கு தண்டனையை நிறைவேற்ற முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.  இந்த சட்டச்சிக்கல்கள் முடிவடைந்து மீண்டும் பிப்ரவரி 1-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மீண்டும் குற்றவாளிகள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பின்னர் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மார்ச் 3ந்தேதி தூக்கில் போட தேதி குறிக்கப்பட்டது.

இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மீண்டும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையை மாற்றும்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுமீது இன்று உச்சநீதி மன்றம் விசாரணை நடத்தி, வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதன்காரணமாக  குற்றவாளி 4 பேருக்கும் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது…