புதுடெல்லி: நாங்கள் இன்று சிறந்த டெஸ்ட் அணியாக திகழ்வதற்கு, ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற அடிலெய்டு டெஸ்ட் முக்கிய காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் இந்திய கேப்டன் விராத் கோலி.
அந்த ‍அடிலெய்டு டெஸ்டில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 517 ரன்களும், இந்தியா 444 ரன்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 290 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து, 364 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
இறுதியில், இலக்கை விரட்டிய இந்திய அணியால், 315 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து, 48 ரன்களில் தோல்வி கண்டது. அப்போது இந்தியக் கேப்டனாக புதிதாகப் பொறுப்பேற்றிருந்த விராத் கோலி, இரண்டு சதங்கள் விளாசினார்.
அவர் அந்தப் போட்டி குறித்து இப்போது கூறியுள்ளதாவது, “முயன்றால் எதுவும் முடியும் என்பதை அப்போட்டி எங்களுக்கு உணர்த்தியது. வெற்றிபெற முடியவில்லை என்றாலும்கூட, வெற்றிக்கு அருகில் வந்தே தோல்வியடைந்தோம்.
இந்தப் போட்டி கடுமையான ஒன்றாக இருந்தாலும்கூட, இரு அணி வீரர்களும் எல்லை மீறவில்லை. அர்ப்பணிப்பு உணர்வுடன் இலக்கைத் துரத்துவது என்று முடிவுசெய்து விளையாடினோம்.
இந்திய அணி, இன்று டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணியாக திகழ்வதற்கு, அந்த அடிலெய்டு போட்டி ஒரு முக்கிய காரணம்” என்றுள்ளார் விராத் கோலி.