திருவனந்தபுரம்:

ஒலிம்பிக் போட்டியில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்ய வீராங்கணைகள் ஊக்க மருந்து புகாரில் சிக்கியிருப்பதால் இந்திய வீராங்கணை அஞ்சு பாபி ஜார்ஜூக்கு  பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2008-ம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரிலும், 2012 லண்டன் நகரிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற வீரர்கள் பலர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து வீரர்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்த உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் உத்தரவிட்டது.

இதுகுறித்து ரிச்சார்ட் மெக்லாரன் விசாரணை நடத்தினார். இதில் பெரும்பாலான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரஷ்ய வீரர்கள், வீராங்கனைகள் தான் அதிகம் சிக்கினர். இதனால் 2016- ரியோ, தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. ரிச்சார்ட் மெக்லாரன் அறிக்கையில், 2004-ம் ஆண்டில் நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும் ஊக்கமருந்து பயன்படுத்திருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டது.

ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் 6-ம் இடம் பிடித்தார். ரஷ்ய வீராங்கனைகள் தத்யானா லெபெதேவா, இரினா சிமாகினா, தத்யானா கோடாவா ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் பெற்றனர். மரியோன் ஜோன்ஸ் 4-ம் இடம் பிடித்தார். இவர் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியதால் 4-ம் இடத்தை இழந்தார். இதனால் அஞ்சு ஜார்ஜ் 5-வது இடத்திற்கு முன்னேறினார்.

ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற லெபெதேவா, 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் நீளம் தாண் டுதல் மற்றும் டிரிபிள் ஜம்ப் போட்டியில் பெற்ற வெள்ளிப் பதக்கத்தை ஊக்கமருந்து விவகாரத்தில் சி க்கியதால் இழந்தார். ஊக்க மருந்து புகாரில் சிமாகினா 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டது. தத்யானா கோடாவாவின் 2005ம் ஆண்டில் ஊக்கமருந்து புகாரில் சிக்கினார்.

ரிச்சார்ட் மெக்லாரன் அறிக்கையை சுட்டிக்காட்டி இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் தடகள பெடரேசன் அமைப்புகள் சர்வதேச தடகள பெடரேசனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஏதென்ஸ் ஒலிம்பிக் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதோடு சர்வதேச தடகள பெடரேசன் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு புகார் அளிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது.

இது நடந்து ரஷ்ய வீராங்கனைகள் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால் இந்தியாவின் அஞ்சுபாபி ஜார்ஜ்-க்கு  பதக்கம் கிடைக்க வாய்க்கு ஏற்படும். ஆஸ்திரேலியா வீராங்கனை பிரோன்வின் தாம்சன் 4-வது இடத்திலும், பிரிட்டன் வீராங்கனை ஜேட் ஜான்சன் 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இது குறித்து அஞ்சு பாபி ஜார்ஜ் கூறுகையில், ‘‘ஊக்க மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டால் வீராங்கணைகள் பதக்கம் பறிக்கப்படும். இதனால் எனக்கு  பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். போட்டி நடந்து 14 ஆண்டுகள் கழித்து அஞ்சு ஜார்ஜூக்கு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பது இந்திய தடகள வீரர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.