2017 – 2018ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்

சென்னை:

2017 – 2018 நிதி ஆண்டுக்கான  வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். ஆனால், வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான கேரள மாநிலத்துக்கு மேலும் 15ம் அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

வருமான வரித்தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம் என்று வருமான வரித்துறை வற்புறுத்திய நிலையில், இந்த ஆண்டு வருமானவரி கணக்கை ஆதார் இல்லாமல் தாக்கல் செய்யலாம் என  சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளதாகவும், அதிகமாகச் செலுத்திய வரியைத் திரும்ப பெறுவோர் எண்ணிக்கையும் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறிய வருமான வரித்துறை,  வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

இதன்படி இன்று கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். தவறினால், மொத்த ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். 5 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ளவர்கள் டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்ய தாமத கட்டணமாக 5,000 ரூபாயும் , மார்ச் 31 வரை 10,000 ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்தோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.