2018ம் ஆண்டில் அந்நிய செலாவணி பெறுவதில் இந்தியா மீண்டும் முதல் இடம்: உலக வங்கி

வாஷிங்டன்:

டப்பு ஆண்டில், அந்நிய செலாவணி பெறுவதில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடத்தினை பிடிக்கும் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு 62.7 பில்லியன் டாலரும், 2017-ம் ஆண்டு 65.3 பில்லியன் டாலரும் அந்நிய செலாவணியாக இந்தியா பெற்றுள்ளது. இது 2017-ம் ஆண்டு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியில் 2.7 சதவீதம் ஆகும்.

சமீபத்தில், அந்நிய செலாவணி குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு ஆண்டிலும் இந்தியா 80 பில்லியன் டாலருடன் முதல் இடத்தினை பிடிக்கும் என்று கூறியுள்ளது.

இந்தியாவினை தொடர்ந்து சீனா (67 பில்லியன் டாலர்), மெக்ஸிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் முறையே 34 பில்லியன் டாலர், மற்றும் எகிப்து (26 பில்லியன் டாலர்) அந்நிய செலாவணியை பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வளரும் நாடுகளின் அந்நிய செலாவணி நடப்பு ஆண்டில் 10.8 சதவீதம் உயர்ந்து 528 பில்லியன் டாலராக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இதுவே 2017-ம் ஆண்டு 7.8 சதவீதம் அதிகரித்து இருந்தது.

மேலும், 2018-ம் ஆண்டில் தெற்கு ஆசியாவிற்கு அனுப்பப்படும் பணம் 13.5 சதவீதமாக உயர்ந்து 132 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே, 2017ம் ஆண்டில் 5.7 சதவீதமாக அதிகரித்து இருந்தது.

வரும் 2019ம் ஆண்டில், உலக அளவிலான அந்நிய செலாவணி 3.7 சதவீதம் அதிகரித்து 715 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.