5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன

டில்லி

னைவரும் எதிர்பார்த்திருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (டிசம்பர் 11) வெளியாக இருக்கின்றன.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 12 முதல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. இறுதியாக தெலங்கானா மற்றும் ராஜஸ்தானில் டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

230 தொகுதிகள் உள்ள மத்தியப்பிரதேசத்தில், கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும், பாஜக கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அங்கு 2005-ம் வருடம்முதல் முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் சவுகான் இருக்கிறார். இந்த மாநிலத்தில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது.

90 தொகுதிகள் உள்ள சத்தீஸ்கரில் அம்மாநிலம் உருவான 15 ஆண்டு காலமாக ரமண் சிங் முதல்வராக இருந்து வருகிறார். இங்கும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. சத்தீஸ்கரிஸ் நக்சல்கள் பிரச்னை அதிகமுள்ள 8 மாவட்டங்களில் பழங்குடியினர் மற்றும் தலித் வாக்காளர்கள் அதிகம். அந்த இடங்களில், மாயாவதியின் மூன்றாவது அணி காங்கிரசின் வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானைப் பொருத்தவரை ஒருமுறை ஆட்சியைப் பிடித்த கட்சி, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றது இல்லை. அந்த சென்டிமென்டை மாற்ற முதல்வர் வசுந்தரா ராஜே தீவிர பிரசாரம் செய்தார். இங்கு காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக-வில் இருந்து பிரிந்த அனுமான் பேனிவால், பாஜகவின் வாக்குகளை கணிசமாக பிரிப்பார் என்று கணிக்கப்படுகிறது.

தெலங்கானா உதயமாகி இரண்டாவது சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. 119 தொகுதிகள் உடைய இம்மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கும், காங்கிரஸ் – தெலுங்கு தேசம் கூட்டணிக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது.

40 தொகுதிகள் உடைய மிசோரம் மாநிலத்தல் ஆளும் காங்கிரசுக்கும், மிசோ தேசிய முன்னணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

எதிர்வரும் மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டாமாக கருதப்படும் இந்த 5 மாநில தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது.