2018ம் ஆண்டு ‘நீட்’ ஹால்டிக்கெட் வெளியீடு….கெடுபிடி தொடர்கிறது

டில்லி:

2018ம் ஆண்டிற்கான ‘நீட்’ ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ இணைய தளத்தில் இன்று வெளியான ஹால்டிக்கெட்டில் தேர்வு எழுதுவோரின் புகைப்படம், தேர்வு மைய விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு தேர்வு அறைக்குள் அனுமதியில்லாத பொருட்கள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு ஆடை கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடு தவிர்க்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இத்தகைய கெடுபிடிகளால் மாணவ மாணவிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.

தேர்வு எழுதுவோர் இலகு ரக ஆடைகள் தான் அணிய வேண்டும். அறைக் கை சட்டை தான் அணிய வேண்டும். பெரிய அளவில் பட்டன்கள் இருக்க கூடாது. ஆடை ஊசி, பேட்ஜ், பூ அணிய கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை நீட் கட்டாயம் என்பது கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. தேர்வு மையத்திற்கு சென்ற மாணவ மாணவிகளிடம் அதிகளவில் கெடுபிடிகள் கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்டது.

முழு கை சட்டை அணிந்தவர்கள், ஷூ அணிந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சாதார செருப்பு, ஹீல்ஸ் குறைவான செருப்புகள், சாண்டல் காலணிகள் போன்றவை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. உச்சகட்டமாக கேரளாவில் ஒரு பெண் அணிந்திருந்த ப்ரா அகற்றப்பட்டது. வெடிகுண்டு சோதனையின் போது ப்ராவில் இருந்த இரும்பு கொக்கியால் சத்தம் கேட்ட காரணத்தால் அகற்றப்பட்டதாக பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஜீன்ஸ் பேன்ட்களில் இருந்து பாக்கெட்கள், இரும்பு பட்டன்கள் அகற்றப்பட்டது. இது போல் இந்த ஆண்டும் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும். அதனால் நீட் எழுத செல்லும் மாணவ மாணவிகள் ஆடை, அலங்கார பொருட்கள், காலணிகள் குறித்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.