சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு திமுக, கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில், ஸ்டாலின் உள்பட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.

இதையடுத்து,  அண்ணா சாலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அப்போதைய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  திருநாவுக்கரசர், கராத்தே தியாகராஜன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ,மனிதநேய  மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் ஆகியோர் உள்பட ஏராளமான தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், அதைமீறி போராட்டம் நடைபெற்றதால், தலைவர்கள் 7 பேர் மீதும், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதையடுத்து புகார் பதியப்பட்டுள்ள கட்சித்தலைவர்கள் 7 பேரும் வரும் 26 ம் தேதி சென்னையில் உள்ள  சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.