2019 பொதுத்தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் : அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

டில்லி

த்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 2019 பாராளுமன்ற பொதுதேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது.   ஆனால் இதற்கு பல எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொள்ளவில்லை.   அதனால் இது குறித்து தேர்தல் ஆணையம் எவ்வித முடிவையும் எடுக்காமல் உள்ளது.

இந்நிலையில் சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவைகளின் ஆயுட்காலம் வரும் டிசம்பரில் இருந்து அடுத்த வருடம் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் நிறைவு பெறுகிறது.   இதை ஒட்டி பாராளுமன்றத்தை கலைத்து விட்டு அந்த மாநில தேர்தல்களுடன் பாராளுமன்ற தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஏற்கனவே திட்டமிட்டபடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் வரும் 2019 ஆம் வருடம் நடைபெறும்.   அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் 2019ஆம் வருடம் மே மாதம் 15 தேதிக்குள் நிறைவடையும்.

இதற்கு முன்பு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல்களையும் நடத்த வாய்ப்பு உள்ளதா என பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தை கேட்டிருந்தார்.   இது குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.