2019 லோக்சபா தேர்தல்: திங்கட்கிழமை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

டில்லி:

டுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

வரும் திங்கட்கிழமை (27ந்தேதி) தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிகளுக்கும்  இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு கோடை விடுமுறை காலமான  ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.  இதுகுறித்து  அரசியல் கட்சிகளின் கருத்துகளை அறியவும், தேர்தல் குறித்து ஆலோசிக்கவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில்,  ஜனநாயக அமைப்பை பலப்படுத்த அனைத்துக் கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும், தேர்தலில் பெண் வேட்பாளர்களை அதிக அளவில் அரசியல் கட்சிகள் நிறுத்துவதற்கான ஆலோசனையும் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும்,  தேர்தல் செலவினங்கள், ஒழுங்குமுறைகள், போன்றவை குறித்தும் இந்த  கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும்,  வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரம் முன்பாக அனைத்து வகை பிரச்சாரங்களும் நிறுத்துவது குறித்தும், தேர்தல் பிரசாரம் மற்றும் கருத்துக்கணிப்பு தொடர்பாக   மின்னணு ஊடகங்கள் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது,  தேர்தல் நாளில் அரசியல் விளம்பரங்களுக்கும் தடை விதிப்பது குறித்து அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்க உள்ளது.

டில்லியில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க  நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக் கட்சிகள் மற்றும் 51 மாநிலக் கட்சிகளுக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.