புதுடெல்லி:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 15 முக்கிய வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழுவால் தயாரிக்கப்பட்டது.

இந்த தேர்தல் அறிக்கை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புறங்களில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த உள்ளூர் உற்பத்தி 16 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும்.

கட்சி தாவல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். அரசின் மானியம் பெறுவதில் உள்ள தடை மற்றும் பயன்கள் பெறுவதில் உள்ள தடையை களையும் வகையில் ஆதார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.

இந்திய தண்டனை சட்டத்தின் 499-வது பிரிவு நீக்கப்படும். அவதூறு வழக்கை சிவில் வழக்காக மாற்ற சட்டதிருத்தம் கொண்டு வரப்படும்.
அரசின் அனைத்து திட்டங்களும் சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 முக்கிய வாக்குறுதிகள்

குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தின் கீழ் வறுமையை விரட்ட நியூந்தம் அய் யோச்னா செயல்படுத்தப்படும்.

இதன்படி மிகவும் இந்தியாவில் உள்ள 20 சதவீத வீடுகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கே முன்னுரிமை. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடப்படும்.
விவசாய மேம்பாடு மற்றும் திட்டத்துக்கு நிரந்தரமாக தேசிய ஆணையம் அமைக்கப்படும்.

மருத்துவத்தை கட்டாயமாக்குவோம். ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச சிகிச்சை, இலவச மருந்து கிடைக்க வழிவகை செய்வோம். மருத்துவத்துக்கான செலவை இரட்டிப்பாக்குவோம்.

ஜிஎஸ்டியை எளிதாக்குவோம். ஏற்றுமதிக்கான வரியை ரத்து செய்வோம். அத்தியாவசிய பொருட்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிப்போம்.

அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்குவோம். அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வியை கட்டாயமாக்குவோம். கல்விக்கான நிதியை இரட்டிப்பாக்குவோம்.

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் நிறைவேற்றுவோம். மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

மலைவாழ் மக்கள் வனப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படாத வகையில்,2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.
நிலமில்லா கிராமப் புற மக்களுக்கு நிலமோ அல்லது வீடாகவோ கட்டித் தரப்படும்.

பாஜக ஆட்சியில் அருவறுக்கத்தக்க குற்றங்களும், ஓடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்தன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

நாட்டின் உயர் நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் பாழ்படுத்தப்பட்டன. ரிசர்வ் வங்கி, இந்திய தேர்தல் ஆணையம், சிபிஐ ஆகியவை தன்னாட்சியுடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த தேசிய தேர்தல் நிதி தொடங்கப்படும்.
நகரங்களில் புது மாதிரியான நிர்வாகம் கொண்டுவரப்படும். மேயர்கள் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுவர்.

சுற்றுச்சூழலை தேசிய பிரச்சினையாக கருதி, தேசிய அளவிலான காற்று சுத்திகரிப்பு திட்டம் தொடங்கப்படும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யப்படாது என்று தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் 121 பேரிடம் ஆலோசனையும், விவசாயிகள், ஆசிரியர்கள் டாக்டர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் 53 பேரிடமும் ஆலோசனை பெற்றே இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.