2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவாரா கமலா ஹாரிஸ்?

வாஷிங்டன்:

மெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ், 2020-ம் ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக ஜனநாயக கட்சியின் சார்பில் களத்தில் போட்டியிட கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமலா தேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். இவரது தாய் ஸ்யாமலா தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர் மற்றும் தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தற்போது கலிபோர்னியாவில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் கமலா.

தற்போது, கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். இதன் முதற்கட்டமாக கடந்த வாரம் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல்கள் நடந்து முடிந்தது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக சூறாவளியாய் பிரச்சாரம் செய்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன பெண் இவர்.

அமெரிக்காவில், அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்ட்ர்னி ஜெனரல் பதவியை வகித்து வரும் கமலா, 1990-ம் ஆண்டு அரசியலில் தீவிரமாக களமிறங்கினார். தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர், 2016-ம் ஆண்டு செனட்டர் தேர்தலில் வெற்றி பெற்று கலிபோர்னியாவின் செனட்டராக பதவி வகித்து வருகிறார். நிற வெறிக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர் கமலா. இவர் ‘பெண் ஒபாமா’ என அமெரிக்காவில் பெயர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 2020-ம் ஆண்டில் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றிபெறும் என்று கூறப்படுகிறது. அதற்காக அக்கட்சியின் சார்பாக கமலா தேவி ஹாரிஸ் தான் அதிபர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பாக டிரம்பிற்கு பதில் வேறு ஒருவர் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஜனநாயக கட்சியில் அதிபர் தேர்தலில் போட்டியிட ஏற்ற வேட்பாளர்களில் இவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கட்சியில் இவருக்கு 70 சதவீத உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில், ஜனநாயக கட்சி சார்பில் முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்ட் போட்டியிடக்கூடும் எனும் தகவல்கள் வெளியாகின்றன.

இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெறுவதற்கான களப் பணிகளில் கமலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், அதிபர் தேர்தலில் இவர் போட்டியிடுவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ஒருவேளை, 2020ம் தேர்தலில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெரும் பட்சத்தில், கமலா முதல் அமெரிக்க பெண் அதிபர் ஆவார். அதுவும், முதல் தமிழ் வம்சாவளி பெண் அதிபர் என்ற சிறப்பு அம்சமும் கொண்டு திகழ்வார்.