நோபல் பரிசு பெற்றவர்களுக்கான பாரம்பரிய ஆடம்பர விருந்து: கொரோனா அச்சத்தால் ரத்து

ஓஸ்லோ: நோபல் பரிசு வென்றவர்களுக்கு வழங்கப்படும் பாரம்பரிய ஆடம்பர விருந்து, கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய பிரிவுகளின் கீழ் சேவையாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படும். ஆண்டுதோறும் டிச.10ம் தேதி அதற்கான விழா நடைபெறும்.

நார்வேயின் ஓஸ்லோவில் அமைதிக்கான பரிசும், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் மற்ற துறைகளுக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது. பரிசு பெறுவோருக்கு ஸ்டாக்ஹோமிலுள்ள சிட்டி ஹாலில் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ஆடம்பர விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இந்த விருந்தில், சுவீடன் நாட்டு அரச குடும்பத்தினர் உள்பட உலகம் முழுவதும் 1,300 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பர்.

தற்போது கொரோனா காரணமாக பாரம்பரிய விருந்து ரத்து செய்யப்படுவதாக, நோபல் அறக்கட்டளை இயக்குநர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் அறிவித்துள்ளார். 1956ம் ஆண்டு 2ம் உலக போரின் போது ரத்து செய்யப்பட்ட பாரம்பரிய விருந்து, இப்போதுதான் ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.