டெல்லி:

2020ம்ஆண்டு தாக்கல் செய்யப்படஉள்ள  மத்திய பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதில், தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சரும்,துணைமுதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றுள்ளார். அதுபோல புதுச்சேரி சார்பில், முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார்.

வரும், 2020 – -21ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், 2020, பிப்., 1ல் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறத. இதையொட்டி, நிர்மலா சீதாராமன் தலைமையில், மத்திய பட்ஜெட் தயாரிப்பிற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் நேற்று துவங்கியது.

நேற்றைய முதல்நாள் கூட்டத்தில், வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்களு டன், ‘மின்னணு தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சேவைகள் துறை சார்ந்த தொழிலதிபர்களும் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, இன்று மாநில நிதி அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

வரும் 23ந்தேதி, விவசாயம், வர்த்தகம், தொழில் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன், வஆலோசனை நடைபெற உள்ளது. அவர்களுடன், சுலபமாக தொழில் துவக்குவதற்கான வழிகள், தனியார் முதலீட்டை பாதிக்கும் கட்டுப்பாடுகள், சர்வதேச சந்தையில் போட்டியை சமாளித்து, ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் ஆகியவை பெறப்படும். அவற்றை கருத்தில் கொண்டு, பட்ஜெட் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக டெல்லி புறப்பட்ட ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழகத்தின் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு தேவையான நிதி மற்றும் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி ஆகியவற்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். கோதாவரி – காவிரி இணைப்பை துரிதப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியவர்,

“சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும். அத்தோடு அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போடப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.