இந்தூர்:

இலங்கைக்கு எதிரான 2வது ‘டுவென்டி- டுவென்டி’ போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் 35 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்தார். இந்திய அணி அதிரடியாக விளையாடி 260 ரன் குவித்தது.

இந்தியா-இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி டுவென்டி’ தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், லோகேஷ் ராகுல் ஜோடி அபார தொடக்கம் அளித்தது. பிரதீப் பந்துவீச்சில் ராகுல் தொடர்ந்து ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். தன் பங்கிற்கு தனஞ்செயா பந்தை ரோகித் சிக்சருக்கு பறக்கவிட்டார்.

தொடர்ந்து அசத்திய இவர் குணரத்னேவின் 9வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்து அரை சதம் கடந்தார். இலங்கை பந்து வீச்சை வெளுத்து வாங்கிய ரோகித் 35வது பந்தில் சதம் அடித்தார். இதன் மூலம், சர்வதேச டுவென்டி- டுவென்டி போட்டியில் அதிவேக சதம் கடந்த வீரர் என்ற சாதனையை தென் ஆப்ரிக்காவின் மில்லருடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் டுவென்டி டுவென்டி வரலாற்றில் இரண்டாவது உயர்ந்தப்பட்ச எண்ணிக்கையை சமன் செய்தது இந்தியா. இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.