சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குடுமிபிடி சண்டை நடந்து வருகிறது. மாநிலஅமைச்சர்களே ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வருவதும், அதற்கு மற்றொரு அமைச்சர் மறுப்பு தெரிவிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு.  சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து தற்போது ஆலோசனை நடத்தினோம். அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தலைமைக்கழகம் முறையாக ஆலோசித்து உரிய நேரத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும, முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அதிமுக நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று திடீரென தேனி, பெரிய குளம் பகுதியில், துணைமுதல்வர் ஓபிஎஸ்தான் அடுத்த முதல்வர் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

புரட்சித்தலைவியின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓபிஎஸ், 2021 முதல்வர் ஒபிஎஸ் என்றும் போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது.

இதை கண்ட அதிமுகவினர் இடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்த முதல்வர் எடப்பாடியின் கவனத்திற் கும் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இன்று சுதந்திர தின விழா நிகழ்ச்சி முடிந்ததும்,  அதிமுக மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட் டையன், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணிஉள்பட பல அமைச்ச்ரகள், துணை முதலமைச் சரும்,அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துடன் அவசரே ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, . கட்சியில் உள்ள  பொறுப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மூத்த அமைச்சர்கள் அனைவரும், கோட்டையில் இருந்து புறப்பட்டு முதலமைச்சர் வீடு அமைந்துள்ள பசுமை வழிச்சாலைக்கு சென்றனர். அங்கு முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.

இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தேனி பெரியகுளம் தென்கரையில்  ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.