சென்னை:

மிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல், 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற பிரபல தேர்தல் சூத்திரதாரி பிரசாந்த் கிஷோர் களமிறங்குகிறார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேர்தல் சூத்திரதாரியாக கணிக்கப்பட்டுள்ள பிரசாத் கிஷோர், ஏற்கனவே,  கடந்த 2012 ஆம் வருடம் நடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் பாஜகவுக்காக பணி புரிந்து மோடியை முதல்வராக்கினார். அத்துடன் அவர் 2014 மக்களவை தேர்தலில் மோடிக்காக பணியாற்றி அவரை பிரதமர் பதவியில் ஏற்கனவே  அமர வைத்தார்.

கடந்த 2015ல் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமாரின் கூட்டணிக்காக பணி ஆற்றிய பிரசாந்த் கிஷோர் மூலம் அந்த கூட்டணி வென்று ஆட்சியை பிடித்தது.

அது மட்டுமின்றி 2017 ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்காக பிரசாந்த் கிஷோர் பணி ஆற்றினார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பணியாற்றி, அவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார்.

இதன் காரணமாக பிரசாந்த் கிஷோரை வளைக்க பல அரசியல் கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாந்த் கிஷோருடன் சந்தித்து பேசிய நிலையில், அதிமுகவும், பிரசாந்த் கிஷோரை தனது கட்சிக்காக  பணியாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரசாந்த் கிஷோருடன் திமுக ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கானத் தேர்தல் மற்றும், 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடும் வகையில் தேர்தல் வியூகங்களை வகுக்கும் பணியில் பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தை களமிறக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக  சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம், பிரசாந்த் கிஷோரின் அரசியல் செயல்பாட்டு குழுவில் உள்ள 17 நிர்வாகிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த நிறுவனத்துடன், திமுக 3 மாத கால ஒப்பந்தத்தை  செய்துள்ளது.