புதுடெல்லி: வருகின்ற 2023ம் ஆண்டின் எஃப்ஐஎச் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியை நடத்துவதற்கு இந்தியா தேர்வாகியுள்ளது. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் இந்த முடிவை அறிவித்துள்ளது.

2023ம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 2022ம் ஆண்டின் எஃப்ஐஎச் பெண்கள் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியை ஸ்பெயின் மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி அந்தாண்டின் ஜுலை 1 முதல் ஜுலை 17 வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட நாடுகள் வெளியிடும். 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட எஃப்ஐஎச் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டித் தொடரின் விதிமுறைகளின்படியே, 2023ம் ஆண்டு உலகக்கோப்பையும் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே மொத்தம் 4 முறை எஃப்ஐஎச் உலகக்கோப்பை ஆண்கள் ஹாக்கிப் போட்டித் தொடரை நடத்திய நாடு என்ற பெருமையைப் பெறவுள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1982(மும்பை), 2010(புதுடெல்லி), 2018(புபனேஷ்வர்) ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு, 2023ம் ஆண்டிலும் போட்டியை நடத்தவுள்ளது இந்தியா.