20ஆம் நூற்றாண்டின் ‘அரசியல் சாணக்கியர்’: கலைஞர் கருணாநிதி

லைஞர்…. ஆம்… திமுக தலைவர்…  கலைஞர் கருணாநிதி… திருக்குவளை கருணாநிதி… 

 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர்களில் ஒருவர்.…

இன்றைய உலகின் சகாப்தம்….  இலக்கியவாதி… சீர்த்திருத்த வாதி…  

5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்த ஒப்பற்ற ஒரே  தலைவர்…  

அதிக வருடம் முதல்வராக இருந்து சாதனை படைத்தவர்

இதுவரை தான் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்ற ஒரே தமிழர்

திமுக கட்சியில் 50 ஆண்டு காலமாக தலைவராக இருந்தவர்.

60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஒரே தலைவர்.

அரசியலில் 80ஆண்டு காலம் தனது பங்களிப்பை வழங்கியவர்.

இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்… தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதி…

60 ஆண்டுகள் அரசியல் களத்தில் ஓய்வறியாது பணியாற்றி வந்தவர் கருணாநிதி… இந்த பெயர் இந்திய வரலாற்று சுவடுகளில்  செதுக்கப்பட்டு உள்ளது.… தமிழக அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும், தமிழகத்தை சேர்ந்த கர்மவீரர் காமராஜருக்கு பிறகு…. ஒரு வலிமையான  சக்தியாக இருந்து கோலோச்சியவர் கலைஞர் கருணாநிதி…..

தமிழக அரசியல் களத்தில் ‘கருணாநிதி….  யார்’ என நாடு முழுவதும் அவரது பெயரை  பிரதி பலிக்க வைத்தது….  கல்லக்குடி போராட்டம்தான். 1953 ஆம் ஆண்டு டால்மியாபுரம் ரயில் நிலையத்திற்கு மீண்டும் கல்லக்குடி என்று பெயர் சூட்டக் கோரி தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து கருணாநிதி மேற்கொண்ட போராட்டம் அவருக்கும் திமுகவுக்கும் பெரும் புகழைத் தேடித் தந்தது.   அவரை தமிழக அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது.

அரசியல் சாணக்கியர்

அப்போதைய தமிழக முதல்வர்கள் முதல் இப்போதைய தமிழக முதல்வர் வரை 11 முதல்வர்கள் கண்டவர் கலைஞர் கருணாநிதி ஒருவரே.

தலைமுறை தாண்டிய அவரது அரசியல் வரலாற்றில்  ராஜாஜி,   டி பிரகாசம் , ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என 11 முதல்வர் களின் ஆட்சிக்காலத்தில், அவர்களிடையே  அரசியல் செய்த தமிழகத்தின் சாணக்கியர் கருணாநிதி…

தமிழக மக்களால்  அன்போடு   “கலைஞர்” என்று அழைக்கப்படும் கருணாநிதி,,,, . தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென தனி இடம் பிடித்து,  80 ஆண்டு காலம் தமிழக அரசியலில் அசைக்க முடியாத, அணையாத விளக்காக  திகழ்ந்தவர்.

சீர்திருத்தவாதி கருணாநிதி

சமூக பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும்,  சீர்திருத்தத்திற்காகவும் போராடியவர் திமுக தலைவர் கருணாநிதி..

அண்ணாதுரையின் ஆட்சியின்போது, கருணாநிதி போக்குரவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போதுதான் தனியார் வசம் இருந்த பேருந்துகள்  நாட்டுடைமையாக்கப்பட்டன

கருணாநிதியின் ஆட்சியில்தான் கை ரிக்சாக்கள் ஒழிக்கப்பட்டன. அதற்கு பதிலாக சைக்கிள் ரிக்சாக்கள் வழங்கப்பட்டன. 

குடிசைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக  குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தி, ஏழை மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன. 

சுதந்திர தினத்தன்று மாநிலத்தில்  கொடி ஏற்றும் உரிமையை முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர் கருணாநிதி. 

பிச்சைக்காரர், தொழு நோயாளிகளுக்கு  மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்பட்டதும் கருணாநிதி ஆட்சியில்தான். 

கண்ணொளி திட்டம் கொண்டு வந்து, வயதான முதியவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம். 

பெண்களுக்கு சொத்துரிமை. 

ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம். 

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு. 

மொழிப்போர்த் தியாகிகளுக்கு ஓய்வூதியம். 

மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை. 

ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைத் திட்டம்

கிராமப்புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நமக்குநாமே திட்டம் 

கிராமப்புற மேம்பாட்டுக்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 

விவசாயிகளின் வாழ்வில் ஏற்றம் பெற  உழவர் சந்தைகள் 

அனைத்து ஜாதியினரும் ஒரே இடத்தில் ஐக்கியமுடன் வாழும் வகையில் சமுத்துவபுரம்

பள்ளி மாணவர்களுக்கு  இலவச பஸ் பாஸ்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானச் சட்டம்

அரவாணிகள் என அழைக்கப்பட்டவர்கள் திருநங்கைகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கென தனி நல வாரியம் 

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் உள்பட ஏராளமான நலத்திட்டங்கள் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டன.

யார் இந்த கருணாநிதி

1924ம் ஆண்டு  திருக்குவளை என்ற ஒரு சிறிய கிராமத்தில் ஜூன் 3ம் தேதி பிறந்த கருணாநிதி,  1942ம் ஆண்டு , ஆகஸ்ட் 10ம் தேதியன்று  முதன்முதலாக ‘முரசொலி’ என்ற பத்திரிகையை நிறுவி கட்சியின் அறிவிப்புகளை வெளியிட்டு முத்திரை பதித்தார்.

1957ம் ஆண்டு முதன்முதலாக  மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்,  1961 ம் ஆண்டு  திமுக கட்சியின்  பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1962ம் ஆண்டு  தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1967ம் ஆண்டு திமுக ஆட்சியில்  அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1969ம் ஆண்டு  முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார்.

1970ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு அங்கமாக திகழ்ந்தார்.

1971ம் ஆண்டு 2வது முறையாக தமிழக  முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு 1989ம் ஆண்டு மற்றும் 1991ம் ஆண்டுகளில் மீண்டும்  3வது முறையாக முதல்வராக பதவி வகித்தார்.

1996ம் ஆண்டு 4வது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றார்.

2006ம் ஆண்டு  தேர்தலில் வெற்றிப்பெற்று 5வது முறையாக, மீண்டும் முதல்வராகி சாதனை படைத்தார்.

இலக்கியவாதி கருணாநிதி

தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஒரு பங்களிப்பை உருவாக்கியவர் கருணாநிதி.,. திருக்குறள் முதல் தொல்காப்பியம் வரை பல இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியவர்.

சங்கத் தமிழ் என்னும் நூல் கலைஞர் மு. கருணாநிதி எழுதிய நூல்களில் பிரசித்தி பெற்றது.  இந்த நூலில் சங்க இலக்கியத்தில் உள்ள பொருத்தமான 100 பாடல்களுக்கு புதுக்கவிதையில் விளக்கக் கவிதைகளை எழுதி சாதனை படைத்தவர்.

பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் ஏராளமான இலக்கிய நூல்களை அவருக்கே உரிய பாணி யில் எழுதியுள்ளார். அதுபோல ஏராளமான திரைப்படங்களுக்கும் கதை வசனம் மற்றும் பாடல்களும் எழுதி சாதனை புரிந்துள்ளார்.

பிரபலமான விடுதலைப்போராட்ட வீரர்களான  பொன்னர் சங்கர் முதல் இளைஞன் வரை ஏராளமான திரைப்படங்களில் கதை வசனம், பாடல் போன்ற பணிகளில் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார்.

கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம். இந்த படத்தில், ‘கொள்ளையடிப்பதும் ஒரு கலை’ என்று வசனம் எழுதி பரபரப்பூட்டியவர்.

இவரது பெரும்பாலான கதைகள் அனைத்தும், மக்களை அடிமைச் சங்கிலியில் இருந்து விடுபடும் நோக்கிலேயே இருந்தன.

குறிப்பாக,   ‘விதவை மறுமணம்’,  ‘ஜமீன்தார் முறையை ஒழித்தல்’,  ‘மத பாசாங்குத் தனத்தை ஒழித்தல்’,  ‘தீண்டாமை ஒழிப்பு’ மற்றும் ‘சுய மரியாதை திருமணம்’ போன்றவற்றை சார்ந்தே இருக்கும்.

பாரம்பரிய இந்து மத சமூகங்கள் எதிர்த்த பிராமண ஆதிக்கத்தின் எதிர்மறை அம்சங்களை, தனது படமான ‘பராசக்தியில்’ பிரதிபலித்து, தமிழக  மக்களிடையே நடிகர் திலகம்  சிவாஜி கணேசன் என்ற நவரச நடிகரை தமிழக மக்க ளுக்கும், இந்த உலகுக்கும் பிரபலப்படுதினார்.

எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்ததும் கருணாநிதிதான்.

கலைஞரின் நற்பணிகளை பாராட்டி அவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  அவற்றில் சில….

  • அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கவுரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.
  • தமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.
  • தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கவுரவித்தனர்.
  •  தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.
  • உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் இந்திய மாநிலமான தமிழகத்தின்முதல்வராக, 2009ஆம் ஆண்டில் இருந்த கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

கருணாநிதியின் பொன்மொழிகள்

நான் நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது.. நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும். புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்… உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்.”

உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு தோழமையின் உயிர்த்துடிப்பே, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது.

“பதவி என்பது முள்கிரீடம் போன்றது!” இதுபோன்று ஏராளமான தத்துவ பொன்மொழிகளை உலக மக்களுக்கு வாரி வழங்கி உள்ளார்.

சட்டபேரவையில் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று, தலை இருத்து பூ இல்லா விட்டால் நாணயத்திற்கு மதிப்பில்லை அதுபோன்று எதிர்கட்சிகள் இல்லா அவை முழுமைடையாது என்பது முதல்வராக சட்டமன்றத்தில் கருணாநிதி பேசியவை.

அவர் அன்று பேசியது இன்றைய சட்டமன்றத்திற்கும் பொருந்துகிறது…

உடல் ஊனமுற்றோர்களை மாற்றுத் திறனாளிகள் என அங்கீகாரம் குடுத்தவர் கருணாநிதி.

பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும், இதுவரை ஒருமுறைகூட  நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.

பங்சுவாலிட்டி எனப்படும் நேரம் தவறாமை கருணாநிதியின் நற்பண்புகளுக்கு சான்று. எந்தவொருஅரசு நிகழ்ச்சிக்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ஆஜராவது அவரது வழக்கம்.

இவ்வளவு பிரசித்தி பெற்ற ஒரு தலைவரேயே கடந்த 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடனே நள்ளிரவு கைது செய்தது உலகம் முழுவதும் பெரும்  பரபரப்பாக பேசப்பட்டது. நாட்டின் மூத்த முதுபெரும் தலைவரை நள்ளிரவு மூர்க்கத்தனமாக கைது செய்ததாக ஜெ.வையும், காவல்துறையினரையும் அனைத்து தரப்பினரும் வசை பாடினார்கள்.

இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட திமுக தலைவர் கருணாநிதி இன்று நம்மை விட்டு பிரிந்தார்… அவர் உயிர் பிரிந்தாலும்… அவரது புகழ் என்றும் மறையாது… கலைஞரின் சாதனைகள் பொன்னெழுத்துக்களால் தமிழக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி