கிர் சரணாலயத்தில் மரணமடைந்த சிங்கங்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது

கிர், குஜராத்

னப்பகுதியான கிர் சரணாலயத்தில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதியில் இருந்து 21 சிங்கங்கள் மர்மமாக மரணம் அடைந்துள்ளன.

குஜராத் மாநிலத்தில் கிர் வனப்பகுதியில் சிங்கங்கள் சரணாலயம் அமைந்துள்ளது.   ஆசிய சிங்கங்கள் அதிக அளவில் உள்ள இந்த வனப்பகுதியில் சிங்கங்கள் சுதந்திரமாக உலவி வருவது வழக்கம்.   நாட்டின் மிகப்பெரிய விலங்குகள் சரணாலயமான கிர் சரணாலயத்தில் சிங்கங்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்து வருகின்றன.

கடந்த மதாம் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 11 சிங்கங்கள் மர்மமாக மரணம் அடைந்தன.   அதன் பிறகு செப்டம்பர் 20 முதல் 30க்குள் மேலும் 10 சிங்கங்கள் மரணம் அடைந்துள்ளன.    இதன் மூலம் இறந்து போன மொத்த சிங்கங்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

இறந்த சிங்கங்களின் பிரேத பரிசோதனையில்  இந்த சிங்கங்கள் ஒன்றுக் கொன்று சண்டை இட்டதாலும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாலும் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டன.    அதன் பிறகு இறந்த சிங்கங்களின்  இரத்த மாதிரிகளும் உறுப்புக்கள் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அந்த பரிசோதனையில் நான்கு சிங்கங்களுக்கு நோய் தொற்று இருந்தது தெரிய வந்துள்ளது.   அது மற்ற சிங்கங்களுக்கும் பரவி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.   அதை ஒட்டி மீதமுள்ள சிங்கங்களை வேறு பகுதிக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்த சிங்கங்களை கண்காணிக்க டில்லி மிருககக் காட்சி சாலையை சேர்ந்த நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.   அத்துடன் அமெரிக்காவில் இருந்து நோய் தடுப்பு மருந்துகளை அவசர சிகிச்சைக்காக வரவழைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.    மேலும் பல விலங்கியல் நிபுணர்களும் இது குறித்து ஒரு தீர்வு காண அழைக்கப்பட்டுள்ளனர்.