சென்னை:

21 கப்பல், 5 விமானம், 1 ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடும் பணி நடக்கிறது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறுகையில், ‘‘ ஒகி புயல் காரணமாக 60க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற 537 மீனவர்களை காணவில்லை. ஒகி புயலால் 3 ஆயிரத்து 933 ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. புயல் காரணமாக 5 ஆயிரத்து 32 வீடுகள், 12 ஆயிரத்து 500 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.

கன்னியாகுமரியில்கடலுக்குச் சென்ற மீனவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது . குஜராத்தில் உள்ள தமிழக மீனவர்களுக்கு ஆயிரம் லிட்டர் டீசல் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தொடக்கப்பள்ளி, 9 நடுநிலை பள்ளி கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 192 கி.மீ தொலைவுக்கு 259 ஊராட்சி ஒன்றிய சாலைகள் சேதமடைந்துள்ளன. உடனடி போக்குவரத்துக்காக 8.34 கி.மீ தொலைவுள்ள 13 சாலைகள் சீரமைக்கும் பணி நடக்கிறது’’என்றார்.

கடற்படை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ இதுவரை 268 தமிழக மீனவர்கள் உள்பட 622 மீனவர்கள் மீட்கபட்டுள்ளனர். 625 கி.மீ. தொலைவு வரை கடலில் மீனவர்கள் தேடும் பணி நடக்கிறது. 21 கப்பல், 5 விமானம், 1 ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இலங்கை, மாலத்தீவுகளிலும் மீனவர்கள் வந்துள்ளார்களா என விசாரணை நடந்து வருகிறது. மீனவர்களை தேடும் பணியில் கடற்படையின் 12 போர்க் கப்பல்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. மீனவர்கள் மீட்கப்படும் வரை தேடுதல் பணி தொடரும்’’ என்றனர்.