சென்னை: இறுதியாண்டு மாணாக்கர்களுக்காக கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 210 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியது தெரிய வந்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும்  மாணாக்கர்களுக்கு கொரோனா சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

முன்னதாக  இன்று காலை சேலம் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன்,  பின்னர் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் அதைத் தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளது. 75 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்ததில் 1100  பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இறப்பு சதவீதம் 1 சதவிகிதத்திற்குக் கீழும் நோய்த்தொற்று 2 சதவீதமாகவும் குறைந்துள்ளது. அதையும் ஜீரோவாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.

கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கொரானா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறியவர், கல்லூரி விடுதிகள், உணவு விடுதிகளில் 20 பேருக்கு மேல் தங்கக் கூடாது, கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் கல்லூரி ஆய்வகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் மாணவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்துத் தள்ளி நிற்க வேண்டும், ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுக்கது.

ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். கொரோனோவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மனநல சிகிச்சை அந்தந்த அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் தெரிவித்தால், அங்கு உடனடியாக ஆய்வு நடத்தி அந்த மருத்துவமனையின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சென்னையில் சென்னையில் உள்ள கல்லூரிகளில்  6,344 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில், 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 3,773 பேருக்கு கொரோனா நெகடிவ் என்று வந்துள்ளதாகவும்,  2,361 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.