கேரளா புயலில் சிக்கிய 218 மீனவர்கள் மீட்பு

திருவனந்தபுரம்:

கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டை மற்றும் ஆலப்புழை மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. ஒகி புயல் அரபிக்கடல் நோக்கி நகர்ந்து சென்றது. ஒகி புயல் தென் கேரளாவிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கேரளாவில் புயல் காற்றுடன் மழை பெய்ததில் மரம் விழுந்து 4 பேர் பலியாகினர் என நேற்று தெரிவிக்கப்பட்டது.

இன்றும் காற்று மழை காரணமாக நேரிட்ட விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர் என அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்த வண்ணம் உள்ளது. ஒகி புயல் காரணமாக லட்சத்தீவு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. லட்சத்தீவில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் அடுத்த 24 மணி நேரங்களுக்கு மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கேரளாவில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற 200–க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமானார்கள் என செய்திகள் வெளியாகியது. மீனவர்கள் அனைவரும் ஒகி புயலில் சிக்கி நடுக்கடலில் தவித்துக் கொண்டு இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடற்படையின் கப்பல்கள், விமானப்படையின் 4 விமானங்கள் மீட்பு பணிக்காக உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. மீட்பு குழுவினர் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் மோசமான கடலில் வானிலை நிலவியதால் மீட்பு பணியில் இடையூறு நேரிட்டது.

கேரள மாநில முதல்வர் அலுவலகம் தகவலின்படி நேற்று முதல் கடலில் சிக்கிய 218 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் முயற்சியினால் அவர்கள் பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். 38 படகுகள் கடலில் நிலைக்கொண்டிருந்த இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளது. உணவு வழங்கப்பட்டது. அதுபோன்று பிற படகுகளையும் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.