ஷாங்காய்

சீன நாட்டை லெகிமா புயல் தாக்கியதால் 22 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

சீன நாட்டுப் பகுதியில் இந்த ஆண்டு இது வரை எட்டு புயல் மையம் கொண்டிருந்தது. தற்போது சீனாவை தாக்கியுள்ள லெகிமா புயல் இந்த ஆண்டின் 9 ஆவது புயல் ஆகும். இந்த புயல் மிகவும் கடுமையானது என்பதால் சூப்பர் புயல் என அழைக்கப்படுகிறது இந்த புயல் காற்றின் பாதிப்பால் கடந்த 3 நாட்களாக ஷாங்காய் நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது.

நேற்று அதிகாலை தைவான் மற்றும் ஷாங்காய் நகருக்கு இடையே  உள்ள வென்லிங் பகுதியில் லெகிமா புயல் கரையைக் கடந்தது. அந்த பகுதியில் மணிக்கு 147 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. தொடர்ந்து மழையும் பெய்தது. சீன நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தும் சேதம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

புயலினால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அனைத்து  இடங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் இரு சக்கர வாகனத்தில் சென்ற மக்கள் இடையூற்றுக்கு ஆளாகினர். ஷாங்காய் நகரில் உள்ள பொழுது போக்கு பூங்கா மற்றும் விடுதி வரலாற்றில் முதல் முறையாக மூடப்பட்டது.

புயல் மழை காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இதில் ஷாங்காய் நகரில் இருந்து மட்டும் சுமார் 2.53 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர். புயல் மற்றும் வெள்ளத்தினால் 22 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதைத் தவிர 10 பேர் காணாமல் போய் உள்ளனர். அவர்கள்  மரணம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.