டில்லியில் 22 பேர் உயிரிழந்தது மதக் கலவரத்தால் அல்ல : மனித உரிமைக் குழு தலைவர் மழுப்பல்

பெங்களூரு

டில்லியில் 22 பேருக்கு மேல் உயிரிழந்தது மதக்கலவரத்தால் அல்ல வெறும் தவறுதலால் என மனித உரிமைக் குழு தலைவர் கூறி உள்ளார்.

டில்லியில் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நகரெங்கும் பரவியது.  டில்லியின் வடகிழக்கு பகுதியில் கடும் வன்முறை வெடித்துள்ளது.   இந்த வன்முறை காரணமாக ஒரு தலைமைக் காவலர் உட்பட சுமார் 22 பேர் நான்கே நாட்களில் உயிரிழந்துள்ளனர்.    மேலும் அந்தப் பகுதிகளில் பல இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு 4 மசூதிகள் எரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முன்னாள் தலைமை நீதிபதியும் மனித உரிமைக் குழுவின் தலைவருமான எச் எல் டாத்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம், “தற்போது நடந்திருப்பது மதக் கலவரம் எனக் கூற முடியாது.  இது ஒருவகையான மனப் பிறழ்ச்சி அல்லது சிறிய தவறுதல் எனக் கூறலாம்.   ஒரு விவகாரத்துக்கு ஆதரவும்  இருக்கும் அத்துடன் எதிர்ப்பும் இருக்கும் .  இது சகஜமானதாகும்.

இவற்றுக்கு வன்முறை மூலம் தீர்வு காண முடியாது.  இது குறித்து இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும்.   இந்த விவகாரத்தில் காவல்துறை அல்லது அரசு ஏதும் மனித உரிமை மீறல் நடத்தியுள்ளதா என்பதை மனித உரிமை ஆணைய, கண்டறிய விரும்பினால் அது குறித்து நாங்கள் விசாரணை நடத்துவோம்.

இந்த குடியுரிமை சட்ட விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் விரைவில் ஒரு முடிவு அளித்தால் இந்த விவகாரங்கள் எளிதில் முடியும்   அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு எடுக்கும் முடிவுகள் சரியானதா இல்லையா என்பதைக் குறித்து உச்சநீதிமன்ற அளிக்கும் தீர்ப்பு ஒரு முன் மாதிரியாக விளங்கும்.

டில்லியில் நடைபெறும் கலவரங்களை மனித உரிமைக்குழு அமைதியாக வேடிக்கை பார்ப்பதாகச்சொல்வது தவறு.  அந்தக் குழுவுக்கு அரசு அளித்துள்ள அதிகாரங்களை மீறிச் செயல்பட முடியாத நிலை உள்ளது  இந்த குழுவுக்கு பல் உள்ளதா இல்லையா என்பதை விட மேலும் அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.