சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி முதல் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பித்து விட்டதால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. அதே நேரத்தில் எதிர்பாராத விதமாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சிக்குள்ளாகினர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில்  மழை பெய்தது.

இந் நிலையில், சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் 20 ஆம் தேதி முதல் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சராசரியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்றும் வரும் 22ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.