ராணிபேட்டையில் 22 போலி மருத்துவர்கள் கைது… ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

ராணிப்பேட்டை:

ராணிபேட்டை பகுதிகளில்  நடத்தப்பட்ட  சோதனைகளில் 22 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின்  கிளினிக்குகளும் சீல் வைக்கப்பட்டுஉள்ளது .ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில் சார் ஆட்சியர், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் நோய்கள் அதிகரித்தும் நிலையில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் போலி மருத்துவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது களையெடுக்கப்பட்டு வந்தாலும், மற்றொரு புறம் உருவாகியே வருகிறார்கள்.

இதுபோல ராணிப்பேட்டை பகுதியிலும் ஏராளமான போலி மருத்துவர்கள் ஏழை மக்களை குறிவைத்து பகுதி நேர மருத்துவமனைகள் நடத்தி கல்லாக்கட்டி வந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் மருத்துவத்தில் சந்தேகம் ஏற்பட்டத்தை தொடர்ந்து, புகார்கள் எழுந்தன.

இதையடுத்து,  போலி மருத்துவர்களை களையெடுக்க ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி, சிறப்புக் குழுக்களை அமைத்து, கண்காணித்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருந்தார். அதன்படி ராணிப்பேட்டையை அடுத்த  அம்மூர், காவனூர் பகுதியில் கிளினிக் நடத்தி வந்த 4 போலி மருத்துவர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டனர்.

அதையடுத்து, இன்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 22 போலி மருத்துவர்கள் சிக்கினர். மேலும் 33 கிளினிக்குகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சோளிங்கரில் 7 போலி மருத்துவர்கள், கலவையில் 3 பேர், ஆற்காட்டில் 2 பேர், வாலாஜாபேட்டையில் ஒருவர், நெமிலியில் 3 பேர், அரக்கோணத்தில் 6 பேர் பிடிபட்டுள்ளனர். சிலர் தப்பி ஓடி விட்டடதாகவும் கூறப்படுகிறது.