அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் 22 லட்சம் அரசு வேலைவாய்ப்புக்கள் : ராகுல் உறுதி

டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் வருடத்துக்குள் 22 லட்சம் அரசு வேலை வாய்ப்புக்கள் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் நாளுக்கு நாள் வேலை இன்மை அதிகரித்து வருகிறது.   வேலை இழப்புடன் அரசு வாக்குறுதி அளித்தபடி புதிய வேலை வாய்ப்புக்களை அமைக்காததும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.    நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் வேலை இன்மை முக்கிய பங்கு வகிக்கும் என சொல்லப்படுகிறது.

இதில் முக்கியமாக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணி இடங்கள் வெகு நாட்களாக நிரப்பப்படாததும் ஒரு காரணம் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.    மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் மாநில அளவில் காலியாக உள்ள இடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்படவில்லை என பல மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “இன்றைய நிலையில் 22 லட்சம் அரசு வேலை வாய்ப்புக்கள் நிரப்பப்படாமல் உள்ளன.   நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த இடங்கள் வரும் 2020 ஆம் வருடம் மார்ச் 31 க்குள் நிரப்பப்படும்.   அத்துடன் மத்திய அரசு மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அளித்து இந்த காலி இடங்களை நிரப்ப உதவப்படும்”  என பதிந்துள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி