சென்னை போயஸ் தோட்டத்தில் ஓட்டல் அதிபர் வீட்டில் 22 சிலைகள் மீட்பு: ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் அதிரடி

சென்னை:

பிரபல சிலை கடத்தல் மன்னனின் நண்பர் தீனதயாளன் கூட்டாளியான ஏற்றுமதியாளர்  ரன்வீர்ஷாவுக்கு வீட்டில் 100க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்ட நிலையில், போயஸ் கார்டனில் உள்ள கிரண்ராவ் என்பவரின் வீட்டில் இருந்தும் 22 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்ப்டுத்தி உள்ளது.

கிரண் ராவ் வீட்டில் மண்ணில் மறைக்கப்பட்ட கோயில் சிலைகள், தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மண்ணில் தோண்ட தோண்ட சிலைகள் கிடைப்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரணை நடத்தி வரும் ஐஜி பொன்மாணிக்க வேல் தலைமையிலான காவல் துறையினர், சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை சைதாப்பேட்டை யில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில், ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் 2 நாட்கள் சோதனை நடத்தினர்.

ரன்வீர்ஷா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஐம்பொன் சிலைகள் உள்பட 89 சிலைகள் மீட்கப்பட்ட நிலையில், ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான  பண்ணை வீட்டில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் 100 ஆண்டுகள் பழமையானது. மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு 100 கோடி வரை இருக்கலாம் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை  போயஸ் தோட்டத்தில் உள்ள  ஓட்டல் உரிமையாளர் கிரண் ராவின் வீட்டில் சிலைகள் பதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில்,  சிலைக்கடத்தல் தடுப்பு போலீஸ் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவரது வீட்டில் மண்ணில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 சிலைகளை மீட்கப்பட்டுள்ளது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பேட்டியளித்த சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி, மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் மிகவும் தொன்மையானவை என்பதில் சந்தேகமில்லை. முறைப்படி வாங்கப்பட்ட சிலைகளை மண்ணில் மறைத்ததில் சந்தேகம் உள்ளது என்று  கூறினார்.

இதையடுத்து, ஓட்டல் அதிபர் கிரண் ராவ் வழக்கறிஞர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பேது,  கிரண் ராவ் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். அனைத்து சிலைகளும் வாங்கப்பட்டவை, திருடப்பட்டவை அல்ல என் தெரிவித்தார்.

சிலைக்கடத்தல் கும்பலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.