கோவை குண்டுவெடிப்பில் பலியான காவலரின் மகளுக்கு 22ஆண்டுகளுக்கு பிறகு அரசு பணி!

கோவை:

நாட்டையே உலுக்கிய 1997ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில், உயிரிழந்த காவலரின் மகளுக்கு தற்போது அரசுப் பணி வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 22 ஆண்டுகளுக்கு பணி கிடைத்திருந்த அந்த குடும்பத்தினரிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1997ம் ஆண்டு நவம்பர் 29 அன்று  காவலர் செல்வராஜ் உக்கடம் அருகே பணியில் இருந்தபோது, முஸ்லிம் மதவாதிகளால் கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்களையடுத்து, 1998 பிப்ரவரி 14 அன்று, கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது.  தொடர்ந்து 4 நாட்கள் பல இடங்களில் குண்டு வெடிப்பு நடைபெற்று, நகரமே கலவரமாக மாறியது.

சுமார் 18-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்த நிலையில், 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயமடைந்தனர். கோடிக்கணக்கான மதிப்பில் பொருள்சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில்,   1997-ம் ஆண்டு கொல்லப்பட்ட காவலல் செல்வராஜ் மகளுக்கு தற்போது  அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டபோது, அவரது மகள் 10மாத குழந்தை. அந்த குழந்தையின் நிலை என்ன என்பது தெரியாத நிலையில், அவரை அவரது உறவினர்கள் பாதுகாப்பில் வளர்த்து வந்தனர்.

தற்போது காவலர் செல்வராஜின் மகள் லாவண்யாவுக்கு 21 வயதாகும் நிலையில், அவருக்கு  அரசுப் பணியைப் பெற்றுக் கொடுக்க காவல்துறை அதிகாரிகள்  முயற்சி எடுத்து வந்தனர். இதையடுத்து,  கோவை மாவட்ட ஆட்சியர்  ராசாமணி, லாவண்யாவுக்கு, கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை வழங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து, லாவண்யா  தன் தாயுடன் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.