அமிர்தசரஸ்: பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா பன்ஜா சாகிப் புனித ஸ்தலத்தில், பைசாக்கி திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, இந்தியாவிலிருந்து 2,200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், அட்டோக் மாவட்டத்தில் உள்ள ஹசன் அப்தல் நகரத்தில் அமைந்துள்ளது குருத்வாரா பஞ்சா சாகிப் புனித ஸ்தலம். சீக்கிய மத ஸ்தாபகரான குருநானக் தேவ்வின் கைப் பிரதி இங்கே பாதுகாக்கப்படுகிறது.

புதிய அறுவடைப் பருவத்தின் தொடக்கத்தைக் குறிப்பதுதான் பைசாக்கி திருவிழா. இதைக் கொண்டாடுவதற்காகத்தான் இந்தியாவிலிருந்து 2,206 சீக்கிய பக்தர்கள், இரண்டு சிறப்பு ரயில்களின் மூலம் வாகா எல்லைக்கு சென்றடைந்தனர்.

அங்கே, பாகிஸ்தானுக்கான வெளிக்குடியேற்ற அறக்கட்டளை சொத்து வாரியத்தின் செயலாளர் தாரிக் கான் மற்றும் பாகிஸ்தான் குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் சர்தார் தாரா சிங் ஆகியோர் வரவேற்றனர்.

பாகிஸ்தான் வெளிக்குடியேற்ற அறக்கட்டளை சொத்து வாரியம்தான், அந்நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தினரின் புனித ஸ்தலங்களைப் பராமரிக்கும் பொறுப்பை மேற்கொள்கிறது.

– மதுரை மாயாண்டி