சென்னை

மிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் சரிந்திருந்த பத்திரப்பதிவு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து அலுவலகங்கள் மற்றும் வர்த்தகம் மூடப்பட்டது.  தமிழக அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டித் தரும் பத்திரப்பதிவு மிகவும் சரிவடைந்தது.   கடந்த 2018 பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு தொடங்கப்பட்டது.   ஆயினும் கொரோனா காலத்தில் ஆன்லைன் பத்திரப்பதிவும் வெகுவாக குறைந்தது.

தற்போது பத்திரப்பதிவுகள் அதிகரித்து வருகிறது.  ஒவ்வொரு நாளும் பதியப்படும் பத்திரங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதில் அதிக பட்சமாக இதுவரை கடந்த 2019 செப்டம்பர் 12ல் 18,581 ஆவணங்களும், 2019 மார்ச் 13ல் 18,674ம், 2020 பிப்ரவரி 26ம் தேதி 18,703, 2019 செப்டம்பர் 4ம் தேதி 18,967ம், 2020 செப்டம்பர் 16ம் தேதி 19,681ம், 2020 செப்டம்பர் 14ம் தேதி  19,769ம், 2020 அக்டோபர் 29ம் தேதி 20,307ம், 2020 நவம்பர் 6ம் தேதி 21,206ம், 2020 டிசம்பர் 14ம் தேதி 21,128 ஆவணங்கள் பதிவாகியுள்ளது.

நேற்று முன் தினம் சுபமுகூர்த்த தினம் என்பதால் பெருமளவில்  பத்திரப்பதிவு இருக்கலாம் என எதிர்பார்ப்பு இருந்தது.  இதையொட்டிய சார்பதிவாளர் அலுவலகங்களுக்குக் காலை 9 மணி முதல் ஊழியர்கள் அழைக்கப்பட்டனர்.  அத்துடன் கூடுதல் ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர்.  இந்த எதிர்பார்ப்புக்கு இணங்க ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய வந்தனர்.  அவர்கள் யாரும் திருப்பி அனுப்பப்படாமல் இரவு வரை  பத்திரப்பதிவு தொடர்ந்தது.

அந்த ஒரே நாளில் 22,686 பத்திரங்கள் பதியப்பட்டுள்ளன.   இது வரலாற்றில் மிக அதிக அளவாகும். இந்த பதிவுகள் மூலம் அரசுக்கு ரூ.138.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  இதன் அடிப்படையில் கணக்கிடும் போது நடப்பு ஆண்டில் சுமார் ரூ.11000 கோடி வரை வருவாய் ஈட்டலாம் எனத் தெரிய வந்துள்ளது.