கிர் காடுகளில் 3 மாதங்களில் மரணித்த 23 சிங்கங்கள் – காரணம் என்ன?

குஜராத் மாநிலத்தில் அமைந்த கிர் காடுகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 23 சிங்கங்கள் தொடர்ந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தின் கிர் காடுகளில் ஆசிய சிங்கங்கள் அதிக அளவில் வாழ்கின்றன. இந்தியாவில் சிங்கம் அதிகமாக வாழும் பகுதி கிர் காடுதான். கிர் வனப்பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அடுத்தடுத்து சிங்கங்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

விலங்குகளின் உயிரிழப்புக்கு முதுமை, மிருகங்களிடையேயான சண்டை போன்ற பல காரணங்கள் கூறப்பட்டன. ஆனால், சிங்கங்கள் இறந்ததற்கு, விலங்குகளை தாக்கும் கெனைன் டிஸ்டெம்பர் என்னும் வைரஸ் காரணம் என்று தெரியவந்துள்ளது. இதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டு சிங்கங்கள் காப்பாற்றப்பட்டன.

தற்போதை நிலையில், குஜராத்தின் கிர் காடுகளில் 3 மாதங்களில் 23 சிங்கங்கள் அடுத்தடுத்து மரணமடைந்தன. சிங்கங்களின் மரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மலேரியா போன்றவற்றை உருவாக்கும் வைரஸ் தாக்குதல்தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.