சென்னை, நவ. 14–

சென்னை தியாகராயநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் முடிவுற்ற நடைபாதை வளாகம், சீர்மிகு சாலைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மணி அடித்து தொடங்கி வைத்தார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுவாக நிகழ்ச்சிகள் தொடங்கும்போது, ரிப்பன் வெட்டியோ, திரைகளை விலக்கியோ தொடங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த நிகழ்ச்சியில் புதுமையான முறையில் மணி அடித்து தொடங்கி வைக்தார். அதைத் தொடர்ந்து,  அந்த நடைபாதையில் நடந்து சென்று அனைத்து பகுதிகளையும் முதல்வர் பார்வையிட்டார்.

மத்திய அரசு நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை சீர்மிகு நகரங்களாக (smart city) உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்தில்,  தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு ஆகிய 11 நகரங்கள் சீர்மிகு நகரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதில் சென்னையில் உள்ள தி.நகர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டு, பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கு சுமார்,  ரூ.58.97 கோடி செலவில்  நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டது. அதுபோல, அந்த பகுதியில் உள்ள 23  சாலைகளும் வெகுவாக பராமரிக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.

இந்த திட்டங்களை நேற்று புதுமையாக முறையில் முதல்வர் மணி அடித்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில், பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், இரா.துரைக்கண்ணு உள்பட பல அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பகுதி சார்ந்த வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தியாகராய நகர் தேர்வு செய்யப்பட்டு, அதில் வாகன எரிபொருள் மூலம் வெளியேறும் எரிவாயுவை குறைத்து மோட்டார் வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வண்ணமாக ரூ.39.86 கோடி மதிப்பீட்டில் தியாகராய சாலையில் நடைபாதை வளாகம் மற்றும் ரூ.19.11 கோடி மதிப்பீட்டில் 23 சாலைகள் சீர்மிகு சாலைகளாக மறுவடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் தியாகராய நகரில், தியாகராய சாலை முதல் அண்ணா சாலை வரை 1,450 மீ. நீளத்திற்கு இந்த நவீன நடைபாதை வளாகம் அமைக்கும் பணிகள் 7.5.2018 அன்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது.

மோட்டார் வாகனமில்லா போக்குவரத்துக் கொள்கையின் அடிப்படையில் பாதசாரிகளின் பாதுகாப்பான இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக, தியாகராய நகரில் ரூ.19.11 கோடி மதிப்பீட்டில் கீழ்கண்ட 23 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் 23 சாலைகளில் பாதசாரிகளுக்கு உகந்த நடைபாதை, சாலைகளில் வேகக்கட்டுப்பாடு, தெர்மோ பிளாஸ்டிக் வண்ணங்களை பயன்படுத்தி சாலைகளில் குறியீடுகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், பாதசாரிகள் தடையின்றி நடக்க ஏதுவாக சேவைத்துறையினரின் மின்இழைப் பெட்டிகளை மாற்றி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சாலைகள் :

1. பராங்குசபுரம் தெரு

2. டாக்டர். கோபால மேனன் தெரு

3. அசிசி நகர் 2வது தெரு

4. ஜெய்சங்கர் தெரு

5. ராமானுஜம் தெரு

6. கண்ணதாசன் சாலை

7. கில்ட் தெரு

8.. சரோஜினி தெரு

9. மகாராஜபுரம் சந்தானம் சாலை

10. அருளாம்பாள் தெரு

11. ஜெகதாம்பாள் தெரு

12. லோதிகான் 4 தெருக்கள்

13. ராமன் தெரு

14. பிஞ்சல சுப்ரமணியம் தெரு

15. கண்ணதாசன் தெரு

16. கோவிந்து தெரு

17. கிருஷ்ணா தெரு

18. முத்துரங்கன் சாலை

19. சி.ஐ.டி நகர் 5வது பிரதான சாலை

20. சி.ஐ.டி நகர் மாதிரி வீடு சாலை

21. சி.ஐ.டி நகர் கால்வாய் சாலை

22. மூப்பரப்பன் தெரு

23. சதுல்லா தெரு

பனகல் பூங்கா–தணிகாசலம் சாலை, தணிகாசலம் சாலை–போக் சாலை சந்திப்பு மற்றும் போக் சாலை சந்திப்பு–அண்ணா சாலை வரையிலான தியாகராய சாலையில் 1.45 கி.மீ. தூரத்துக்கு உலகத்தரத்திலான நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இரவை பகலாக்கும் அலங்கார மின் விளக்குகள், மூத்த குடிமக்களுக்காக பேட்டரியில் இயங்கும் கார், இலவச ‘வை-பை’ வசதி, இருக்கைகள், பகிர்ந்துகொள்ளும் சைக்கிள், பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிள், குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்கு ரோந்து சென்று சீர் செய்யும் வகையில் போலீசாருக்கு ‘பிரிகோ’ என்ற இருசக்கர வண்டி வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் மட்டுமே செல்லும் இந்த வண்டியில் போலீசார் சம்பவ இடத்தை விரைவாக அடைய முடியும். மேலும் தியாகராய சாலையில் அமைக்கப்பட்ட நடைபாதையை தொடர்ந்து பிராட்வே, என்.எஸ்.சி. போஸ் சாலை, அண்ணா நகர் 2வது அவின்யூ, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உலகத் தர இரட்டை பாதைகள் அமைக்கப்பட்ட உள்ளன.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி,  சீர்மிகு நகரத் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் மூலமாக அற்புதமான, அழகான நடைபாதை ஏறக்குறைய ரூபாய் 40 கோடியில் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல, சாலை வசதிகள் ஏறக்குறைய ரூபாய் 20 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்தப் பகுதிக்கு வருகிற பொதுமக்கள் எளிதாக சாலையில் பயணம் செய்ய முடியும், கடந்து செல்ல முடியும். ஒரு அழகான, உலகத் தரத்திற்கேற்ற நடைபாதையும், சாலை அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.