ஜெயலலிதாவிடம் 2001ம் ஆண்டு 27 தொகுதிகளையும், கலைஞர் கருணாநிதியிடம் 2006 மற்றும் 2011ம் ஆண்டுகளில் முறையே 31 மற்றும் 30 தொகுதிகளையும் கேட்டுப் பெற்ற பாமக, எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவிடம் எப்படியும் கணிசமான தொகுதிகளை, அதிக ஸ்வீட் பாக்ஸ்களுடன் பெற்றுவிடும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் 7+1 இடங்களைப் பெற்ற பாமக, இந்த தேர்தலில் எப்படியும் 40 சட்டமன்ற தொகுதிகள் வரை பெறலாம் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், ஜஸ்ட் 23 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது சற்று ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது.

அதிமுக கூட்டணிக்கு பாமக அவசியம் என்ற நிலையில்தான், வன்னியர்களின் உள்ஒதுக்கீடு அறிவிப்பே வெளியாகியுள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக, தைலாபுரத்திற்கு அமைச்சர்கள் சில சுற்றுகள் நடந்தார்கள். இப்படியாக, அதிமுக கூட்டணியில் பாமக பெரிய முக்கியத்துவம் பெற்ற நிலையிலும், கடைசியாக அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் மட்டுமே என்பது கவனிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

சசிகலா & தினகரன் மூலமாக, அதிமுகவின் வாக்குகள் பிளவுபடக்கூடிய சூழலில், இன்றைய அதிமுக வலிமையிழந்தே காணப்படுகிறது. பாஜக தயவில் காலத்தை ஓட்டிக்கொண்டுள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி இன்னொரு பக்கம்! அப்படியான சூழலிலும், பாமகவுக்கு வெறும் 23 தொகுதிகள்தானா? என்பதுதான் விஷயமே!

இவ்வளவு குறைந்தளவு தொகுதிகளை, பாமக இத்தனை அமைதியாகப் பெற்றுக் கொண்டதற்கு காரணமென்ன? புதுச்சேரியில் ஏதேனும் தனி டீலிங் இருக்கிறதா? அதிகளவு ஸ்வீட் பாக்ஸ்கள் வழங்கப்பட்டனவா? அந்த 23 தொகுதிகளும் பாமக கேட்ட தொகுதிகளாக இருக்குமா? இதில் பாஜகவின் டீலிங் எதுவும் இருக்குமா? திமுக கதவடைத்துவிட்ட நிலையில், வேறுவழியில்லாமல் இந்த எண்ணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு, வரும் நாட்களில் கலவையான பதில் கிடைக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.