விருந்து சாப்பிட்ட 5 பேர் பலி….கணவர் குடும்பத்தை பழிதீர்க்க விஷம் கலந்த இளம்பெண் கைது

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் மகத் கிராமத்தை சேர்ந்தவர் பிரதின்யா சர்வவேஸ் (வயது 23). இவரது கணவர் சுரேஷ் கோவிந்த் சர்வேஸ். 2வது திருமணமாக பிரதின்யா இவரை திருமணம் செய்து கொண்டார். பிரதின்யா கருப்பு நிறத்தில் இருந்துள்ளார். அதோடு சரியாக சமைக்க தெரியாது. இதை அவரது கணவர் குடும்பத்தினர் அடிக்கடி சுட்டிக் காட்டி அவமானப்படுத்தியுள்ளனர்.

மேலும், பிரதின்யாவின் குணாதிசியங்களை கொண்டு முதல் கணவர் இந்த காரணத்தால் தான் விலகிச் சென்றுவிட்டாரோ என்ற கோணத்திலும் கணவர் குடும்பத்தினர் திட்டியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த பிரதின்யா கணவர் சுரேஷ் கோவிந்த், மாமியார் சிந்துல நாத்தனார்கள் உஜ்வாலா பவார்ல ஜோதி அசோக் கதாம், மாமியாரின் சகோதரி சரிதா மானே, இவரது கணவர் சுபாஷ் மானே ஆகியோரை பழிவாங்க திட்டமிட்டார்.

இந்நிலையில் அதே பகுதியில் உறவினர் ஒருவரது வீட்டு திருமண விருந்து நிகழ்ச்சி நடந்தது. தனது கணவர் குடும்பத்தினரை பழிவாங்க திட்டமிட்டிருந்த பிரதின்யா இங்கு தயாரிக்கப்பட்டிருந்த உணவில் பூச்சி மருந்தை கலந்துவிட்டார்.

இதை சாப்பிட்ட அவரது கணவர் குடும்பத்தினர் உள்பட 88 பேருக்கு உடல் நிலை பாதித்தது. வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரதின்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.