சேலம்: தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 37 கோடி மதிப்பிலான 237 கிலோ தங்க நகைகள் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையின்போது சிக்கியது.

தமிழகத்தில ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதாக, பிப்ரவரி 26ந்தேதி மாலை  டெல்லியின் விஞ்ஞான் பவனில் தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ல தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். அதன்படி  தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உடனே தேர்தல் நடத்தி விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன.

இதன் காரணமாக  தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு இலவசப் பொருட்கள் பணம் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் ஏராளமான பறக்கும் படை அமைக்கப்பட்டு அவ்வப்போது சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேனை பறக்கும் படையினர் மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில் ஏராளமான தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுகுறித்த ஆவனங்களை அதிகாரிகள், கேட்டனர்.

ஆனால், அதற்கு சரியான விளக்கம் கொடுக்கப்படாத நிலையில், அந்தப் பகுதியில் உள்ள நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்யவே நகைகள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால்,  உரிய ஆவணங்கள் இல்லாததால் வாகனத்துடன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்த தங்கைகளின் எடை  237 கிலோ என்று தெரிவித்த அதிகாரிகள், அதன் மொத்த மதிப்பு  37 கோடியே 57 லட்ச ரூபாய் என்று கூறினர். அவை அனைத்தும், சேலம் அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னர், நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.