தேனி:
த்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தேனியில் அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்ற, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உட்பட 238 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தேனி, பழனிச்செட்டிபட்டியில், மாநில இளைஞர் காங்., சார்பில், டிராக்டரில் ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.’ஊர்வலத்தில் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, போலீசார் நேற்று முன்தினம் மாலை, 266 டிராக்டர் உரிமையாளர்களுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பினர்.

இதனால், அதிருப்தி அடைந்த தமிழக காங்., தலைவர் அழகிரி, அகில இந்திய இளைஞர் காங்., தலைவர் ஸ்ரீநிவாஸ், செயலர்கள் ஜெபிமாத்துார், ஜெயினா அஞ்சலி, மாநிலத் தலைவர் ஹசன்மவுலானா உள்ளிட்டோர், பழனிச்செட்டிபட்டியில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் நேரு சிலை வரை, அனுமதியின்றி ஊர்வலம் புறப்பட்டனர்.இதையடுத்து, அழகிரி உட்பட, 223 ஆண்கள், 15 பெண்கள் என, 238 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, அழகிரி கூறியதாவது:

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளது. ஆனால், விவசாயி எனக் கூறும் முதல்வர், இ.பி.எஸ்., இந்த சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசை எதிர்க்க தைரியம் இல்லாமல், கைகட்டி நிற்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.அகில இந்திய இளைஞர் காங்., செயலர் ஜெபிமாத்துார் கூறுகையில், ”காந்திய அகிம்சை வழியில் போராடும் எங்களுக்கு, தேனியில் அனுமதி மறுத்தது, ஜனநாயகத்தின் மீது விழும் சம்மட்டி அடியாகும். இதற்கு பிரதமர் மோடி, முதல்வர், இ.பி.எஸ்., பதில் கூற வேண்டும்,” என்றார்.