ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 24 கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம்

அனந்தபூர்: ஆந்திராவில்  அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட, 24 கொரோனா நோயாளிகள் அங்கிருந்து தப்பியுள்ளதாக போலீசார்  தெரிவித்து உள்ளனர்.

அனந்தபூரில் அரசு பொது மருத்துவமனை ஒன்று உள்ளது.  இங்கு  கொரோனா நோயாளிகளும் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நள்ளிரவு மருத்துவமனை அறையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயை கட்டுப்படுத்தினர்.

ஆனால், மருத்துவமனையின் கொரோனா நோயாளிகள் பகுதியில் தீயின் காரணமாக கரும்புகை மூண்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, 24 கொரோனா நோயாளிகள் அங்கிருந்து தப்பி உள்ளனர்.

தீ விபத்தில் மருத்துவமனையில் இருந்த மற்றவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆந்திராவில் கொரோனா தொற்றுகள் அதிகம் உள்ள நிலையில், தற்போது நோயாளிகள் தப்பியோடியது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.