திருமலை: திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், இன்று முதல் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரமும் டோக்கன் வழங்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் வழிப்பாட்டுத்தலங்கள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பின்னர் ஜூன் மாதம் மத்தியஅரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக  ஜூன் 8ந்தேதி முதல் மீண்டும் கோவில் திறக்கப்பட்டு, உள்ளூர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் போது சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை முழு அளவில் பின்பற்ற வேண்டும் என்று ஆந்திர மாநில அரசு தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிப்பதில்  மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதன் காரணமாக திருப்பதி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தேவஸ்தான ஊழியர்கள் 743 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  திருப்பதி தேவஸ்தான போர்டின் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து கொரோனா நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனத்துக்கு மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன.  தற்போது இலவச தரிசனமாக நாள் ஒன்றுக்கு 3ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தரிசனத்துக்கு வரும் வெளிமாநில பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவானதால், அதன் காரணமாகவும் கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இதையடுத்து, இன்றுமுதல் புதிய நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இன்று முதல் சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் 6 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அன்றைய தின முடிவுக்குப் பின்னர், அடுத்த நாளுக்கான டோக்கன் உடனடியாக வழங்கப்படுவதாகவும், பக்தர்கள் தங்குவதற்கு விஷ்ணு நிவாசம் மற்றும் ஸ்ரீனிவாசன் பக்தர்கள் ஓய்வறை சில நாட்களில் வாடகைக்கு விடப்படுவதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.