பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான 24 பேர் கொண்ட சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு: சோனியா காந்தி உத்தரவு

சென்னை: பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான 24 பேர் கொண்ட தமிழக சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்புடன் இறங்கி உள்ளன. தேர்தலுக்கு சில மாதங்கள் இருப்பதால் தமிழக காங்கிரசிலும் மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளை உடனே நியமிக்கும் பணிகள் தொடங்கின.

மூத்த தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரின் ஆலோசனைகளுக்கு பிறகு, புதிய நிர்வாகிகளுக்கான பட்டியல் கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிகளை கவனிக்க ஏதுவாக தனித்தனி கமிட்டிகளை அமைத்து கட்சி தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒன்றையும் சோனியா காந்தி அறிவித்துள்ளார். பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான இந்த குழுவில் மொத்தம் 24 பேர் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்கை நாராயணன், மணி சங்கர் ஐயர், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் தேர்தல் நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் டி.செல்வம், பொன்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஏ.வாசு, பி.சேரன், வழக்கறிஞர் அருண் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தல் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இதில் கே.ஆர்.ராமசாமி, ப.சிதம்பரம் எம்பி, டாக்டர் ஏ.செல்லக்குமார் எம்பி, மாணிக்கம் தாகூர் எம்பி உள்ளிட்ட மொத்தம் 34 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் 19 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, கோபண்ணா தலைமையில் 16 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்பு குழு, கே.வி.தங்கபாலு தலைமையில் 31 பேர் கொண்ட விளம்பரக் குழு, திருநாவுக்கரசர் எம்பி தலைமையில் 38 பேர் கொண்ட பிரச்சாரக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

You may have missed