நீலகிரி

நீலகிரியில் 17 வயது மாணவியைப் பலாத்காரம் செய்த 24 வயது இளைஞருக்கு போக்சோ சட்டத்தில் உச்சக்கட்டமாக 44 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டனி வினோத் என்னும் இளைஞர் வசித்து வந்தார்.  இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 12 ஆம் வகுப்பு மாணவியைத் திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்துள்ளார்.  17 வயதான அந்த மாணவி  இதனால் கருவுற்றுள்ளார்.  அதையொட்டி ஆண்டனி வினோத் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருச்சிதைவு செய்துள்ளார்.  இது பலமுறை நடந்துள்ளது.

இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டி உள்ளார்.  இந்த விவரத்தை அறிந்த மாணவியின் பெற்றோர் காவல்துறைக்குப் புகார் அளித்தனர்.  அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆண்டனி வினோத்தைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.   இதில் வழக்குப் பதியப்பட்டு இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நேற்று இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பு அளித்தார்.   போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட இந்த வழக்கில் ஆண்டனி வினோத்துக்கு 17 வயது மாணவியைப் பலாத்காரம் செய்ததற்கு 20 ஆண்டுகள், மேலும் கொலை மிரட்டலுக்கு 4 ஆண்டுகள் என 44 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இதுவே போக்சோ சட்டத்தில் இதுவரை அளிக்கப்பட்டுள்ள உச்சக்கட்ட தண்டனை ஆகும்.